ஐபிஎல் தொடரில் ஷகீன் அப்ரிடி இடம்பெற்றுருந்தால் நிச்சயம் 14 முதல் 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார் என்று ரவி அஸ்வின் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு திசைகளிலும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றி கடந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவியதற்கான பதிலடி என்று இந்திய ரசிகர்கள் மாறுதட்டிக் கொள்கின்றனர்.
என்னதான் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், 147ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கையும் 20 ஓவர் வரை நகர்த்திச் சென்ற பாகிஸ்தான் அணி தற்போதும் பலமான அணியாகவே கருதப்படுகிறது.
குறிப்பாக கடந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றியை தட்டிப் பறித்த பாகிஸ்தான் அணியின் இடதுகை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சகீன் அப்ரிடி இல்லாமலே பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டதென்றால், எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் அவர் அணியில் இருந்தால் பாகிஸ்தான் அணி கூடுதல் பலத்தோடு வீரியமாக செயல்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போட்டியில் விளையாடாமலேயே அனைத்து கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் விமர்சகர் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் ஷகீன் அப்ரிடி குறித்து இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அஸ்வின் பேசியதாவது, “கடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக செயல்பட்ட போது சதாப்கான் மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகிய இருவரும் மிக சிறந்த முறையில் பந்து வீசினர். ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஷகீன் அபரிடியின் ஆக்ரோஷமான பந்துவீச்சு தான்,அவர் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் விக்கெட்டை சரித்துவிட்டார்.அவர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நான் எப்பொழுதும் வியப்பதெல்லாம் ஒருவேளை ஷகின் அப்ரிடி ஐபிஎல் தொடரின் ஏலத்தில் இடம்பெற்றால் என்ன நடக்கும் என்பது தான், உயரமான இடதுகை வேகப்பந்து வீச்சாளர், சிறந்த பாமில் உள்ளவர், போட்டியின் இறுதி நேரங்களில் யாக்கர் மழை பொழிபவர் என்ற திறமை படைத்த இவர், நிச்சயம் 14 முதல் 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார்” என்று ரவி அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.