பும்ரா உடல்நிலை பற்றி பலரிடமும் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் பிறகு தான் அவர் உலகக் கோப்பையில் வேண்டாம் என்று முடிவு செய்தோம் என தனது பேட்டியில் பேசியுள்ளார் ரோகித் சர்மா.
ஆசிய கோப்பை தொடரில் பும்ரா இல்லாததால் இந்திய அணி பெருத்த பின்னடைவை சந்தித்தது. அதன் பிறகு டி20 உலக கோப்பை தொடரிலும் இல்லாமல் போய்விடுவாரோ? என அச்சம் நிலவி வந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குணமடைந்து வந்து விட்டார். அதனால் டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் கொடுக்கப்பட்டது.
இந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு பிறகு நடைபெற்ற தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு முன் மீண்டும் காயம் அடைந்தார். அவரை பரிசோதித்து மருத்துவர்கள், “பும்ராவை உலகக்கோப்பை தொடரில் ஆட வைப்பது ஆபத்து. காயத்தின் தீவிரம் மேலும் அதிகமாகும்.” என எச்சரித்தனர். இதன் அடிப்படையில் பிசிசிஐ, ‘பும்ரா உலகக்கோப்பை அணியிலிருந்து விலகுகிறார்.’ என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வாரத்திற்கு பின்னர் மாற்று வீரராக முகமது சமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து பும்ரா உடல்நிலை குறித்து விவாதங்கள் எழுந்து வந்தது. தற்போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரோகித் சர்மா தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
“பும்ராவின் உடல்நிலை குறித்து பல்வேறு நிபுணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஒரு சில போட்டிகள் மட்டும் வெளியில் அமர்த்தி ஓய்வுபெற வைத்து, மற்ற போட்டிகளில் விளையாட வைக்கலாமா? என்று இன்னொரு வாய்ப்பையும் கேட்டேன். ஆனால் பும்ராவிற்கு 27-28 வயது தான் ஆகிறது. இப்போது ரிஸ்க் எடுத்தால் மீதமிருக்கும் காலங்களில் அவரால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகும் அளவிற்கு ஆபத்து உள்ளது என நான் யோசித்ததை மருத்துவர்களும் என்னிடம் கூறினர். ஆகையால் உடனடியாக அவருக்கு உலகக்கோப்பையில் இருந்து விலக்கி, ஓய்வு கொடுப்பது நல்லது என்று முடிவெடுத்து விட்டோம். சில காலம் ஓய்வெடுத்தால் அவரால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப முடியும்.
28 வயதாகும் அவருக்கு இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. இப்போது ரிஸ்க் எடுத்து, அதை எங்களால் வீணடிக்க முடியாது . அவரின் இடத்தை நிரப்புவது நிச்சயம் கடினம் என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் இந்த முடிவை நாங்கள் எடுப்பது அவரின் எதிர்கால நல்லதுக்கு மட்டுமே என்று அனைவரும் புரிந்து கொள்வர்.” என்றார்.