வயிறை பெரிதாக வளர்த்துக்கொண்டு முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பவர்கள் பிளேயர் என நினைத்துக் கொள்கிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்.
பாகிஸ்தானின் சமீபகால ஃபீல்டிங் மோசமாக இருந்து வருகிறது. ஆசிய கோப்பை தொடரிலும் இதை நம்மால் பார்க்க முடிந்தது. தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-4 என்ற கணக்கில் தனது சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு முக்கிய காரணம் அதன் ஃபீல்டிங். முக்கியமான கட்டத்தில் கேட்ச்கள் தவறவிட்டது. பவுண்டரிகளை தடுக்காதது என தொடர்ந்து பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டலாம்.
பாகிஸ்தான் அணியில் முன்னாள் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், வீரர்களின் உடல் தகுதியை குறிப்பிட்டு, சிலர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்று சாடினார். அவர் கூறுகையில்,
“நான் ஒரு முறை மற்றும் வக்கார் யூனிஸ் இரண்டு முறை என தொடர்ந்து வீரர்களை உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என வற்புறுத்தியதற்காக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பில் இருந்தும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் பாகிஸ்தான் அணி எனக்கு மிகவும் முக்கியம். அதில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
நான் அணியில் இருக்கும் பொழுது மாலிக், ஹபீஸ், அப்ரிடி ஆகியோரில் நான் உட்பட உடல் தகுதியை முழு கவனமாகக் கொண்டிருப்போம். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே உடல் தகுதியை பற்றி கவலை கொள்கிறார்கள். மற்றவர்கள் நன்றாக வயிறு வெளியே தெரியும் அளவிற்கு தொப்பையை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் இது அணிக்கு பின்னடைவை கொடுக்கலாம். எவ்வளவு ரன்கள் அடித்து இருந்தாலும் பீல்டிங் மோசமாக இருந்தால் அது அணிக்கு பின்னடைவு தான்.
பலமுறை நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உள்ளூர் போட்டிகளுக்கும் உடல் தகுதியை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த கட்டங்களில் வீரர்கள் தனது உடல் தகுதியை பற்றி சிந்திப்பார்கள் என அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் அதற்கு எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லை.” என்று சாட்டினார்.