மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் தோல்வியுற்று வெளியேறியது இந்தியா.
அதன் பின் மே.இ.தீவுகளில் நடைபெற்ற டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களை முழுமையாக கைப்பற்றியது.
முழு உற்சாகத்துடன் காணப்படும் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்களில் தனது பலத்தை நிரூபித்துள்ள இந்தியா, இன்னும் டி20 ஆட்டத்தில் வலுவான சக்தியாக நிலைபெறாமல் உள்ளது.
2020-இல் டி20 உலகக் கோப்பை: இதற்கிடையே வரும் 2020-இல் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் அணி ஒருங்கிணைப்பை தேர்வு குழு மேற்கொண்டு வருகிறது. வீரர்களின் தனித்திறமைகளையும் ஆய்வு செய்து தேர்வு செய்கிறது.
உற்சாகமில்லாத தென்னாப்பிரிக்கா: அதே நேரம் தென்னாப்பிரிக்க அணியும் ஐசிசி உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்த நிலையில் உற்சாகமின்றி உள்ளது. டூபிளெஸ்ஸிஸ் நீக்கப்பட்டு, தொடக்க வீரர் குயின்டன் டி காக் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தங்கள் அணிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கான பணிகளை அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சும் காகிúஸா ரபாடாவின் செயல்பாட்டை நம்பி உள்ளது.
2 அணிகளும் நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் இந்தியா 8-இலும், தென்னாப்பிரிக்கா 5-ஆலும் வென்றுள்ளன.
தர்மசாலா மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக அமையும். அதே நேரம் பனிமூட்டம் மாலையில் ஆட்டத்தின் தன்மையை மாற்றும்.
கடைசியாக இந்த மைதானத்தில் இந்திய அணி 200 ரன்களை குவித்த நிலையில், அதை சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.