நான் செஞ்சுரி அடிக்கும்போது இப்படித்தான் உணர்ந்தேன்; கேஎல் ராகுல் ஓபன் டாக்!!

‘செஞ்சுரி அடிக்கும்போது என் மனதுக்கு இப்படித்தான் இருந்தது’ என்று முதல் இன்னிங்சில் சதம் அடித்த பிறகு கே எல் ராகுல் மனம் திறந்துபேட்டி அளித்துள்ளார்.

செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை துவங்கியது. மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் மிகவும் நிதானமான துவக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்து வந்தனர்.

அவசரப்பட்டு பந்தை எதிர் கொள்ளாமல்  ஸ்டம்பை நோக்கி வரும் பந்தை மட்டும் அடித்து ரன்களை எடுத்து வந்தனர். இதனால் விக்கெட்டை இழக்காமல் இந்திய அணிக்கு ரன்கள் சேர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்து இருந்தது. மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த விராட் கோலியுடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் மீண்டும் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அரைசதம் கடந்தார். விராட் கோலி 35 ரன்களுக்கு துரதிஸ்டவசமாக ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் நிலைத்து ஆடி வந்த கே எல் ராகுல் டெஸ்ட் அரங்கில் தனது ஏழாவது சதத்தை பூர்த்தி செய்தார். தென்னாபிரிக்க மைதானத்தில் இவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல், 122 ரன்களுடன் களத்தில் இருந்தார். முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த கேஎல் ராகுல் கூறுகையில்,

“இந்த சதம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. நிறைய உணர்வுகளை எனக்கு கொடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு மணி நேரம் களத்தில் நின்றதற்கு பலனாக சதம் கிடைத்ததால், நிச்சயம் இது என் வாழ்நாள் முழுவதும் சிறப்பனதாக இருக்கும்.

ஒரு நல்ல துவக்கம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் நான் எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதுவும் சிந்திப்பதில்லை. அடுத்தடுத்து பந்துகளை எதிர்கொள்ள மனதை தயார்படுத்திக்கொண்டு வந்தேன். நீண்ட பயிற்சிக்கு கிடைத்த பலனாக இதைப் பார்க்கிறேன். நான் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் பார்க்கையில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு ஆட்டத்திற்கு தான் என்னை நான் தொடர்ந்து தயார்படுத்தி வந்தேன். அதற்கு பரிசாகத் தான் சதம் அடித்ததை நான் பார்க்கிறேன். இந்த தருணத்தை மிகவும் உணர்வுபூர்வமாக உணர்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.