பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையும், ஆதரவுமே இந்திய இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என ஆவேஸ் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை அடைந்தது.
நான்காவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்கள் மட்டுமே குவித்தது, ஆனால் பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்ரிக்கா அணியை வெறும் 87 ரன்களில் சுருட்டியது. இந்திய அணியின் இந்த அபார வெற்றியில் 4 விக்கெட் வீழ்த்திய ஆவேஸ் கானின் பந்துவீச்சும், அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கின் பங்கும் முக்கியமானதாக இருந்தது.
இந்தநிலையில், நான்காவது டி.20 போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து பேசிய ஆவேஸ் கான், பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தங்களது மீது வைத்த நம்பிக்கையே தங்களது சிறப்பான ஆட்டத்திற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆவேஸ் கான் பேசுகையில், “இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம். அவர் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார், அனைவருக்கும் சரியான வாய்ப்பை ராகுல் டிராவிட் வழங்கி வருகிறார். வெறும் ஓரிரு போட்டியில் சொதப்பினால் அணியில் இருந்து உடனடியாக ராகுல் டிராவிட் யாரையும் நீக்கிவிட மாட்டார். இதுவே ஒவ்வொரு வீரர்களுக்கும் முக்கியமானதாக இருக்கும், ஆதரவு கிடைத்தால் வீரர்களுக்கு உத்வேகமும் கிடைக்கும். முதல் மூன்று போட்டியிலும் நான் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதால் நான் சற்று ஏமாற்றத்துடன் இருந்தேன், ஆனால் ராகுல் டிராவிட் என்னை அணியில் இருந்து நீக்காமல் நான்காவது போட்டியிலும் வாய்ப்பு கொடுத்தார். ராகுல் டிராவிட் என் மீது வைத்த நம்பிக்கையும், ஆதரவுமே இந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு காரணம்” என்று தெரிவித்தார்.