நம்பர் 1 பவுலர்னு இவரை டவுட்டே இல்லாம சொல்லுவேன்; முன்னாள் வீரர் புகழாரம்!!

நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இவர் நிச்சயம் இருப்பார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா.

தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, மீதம் உள்ள ஆட்டத்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் கையில் எடுத்து வெற்றியாக மாற்றி கொடுத்துள்ளனர்.

20 விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர். குறிப்பாக முகமது சமி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இவரின் வேகத்தை எதிர் கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்க வீரர்கள் திணறியதை நம்மால் போட்டியின்போது காண முடிந்தது.

இவர் பந்துவீசி அச்சுறுத்திய அளவிற்கு விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும், ஒவ்வொரு பந்தும் சிறப்பான லென்தில் இருந்தது. போட்டி முடிந்த பிறகு முகமது சமி பந்துவீச்சை குறிப்பிட்டு பேசிய கேப்டன் விராத் கோலி, “சமகாலத்தில் தலைசிறந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுக்குள் முகமது சமி நிச்சயம் இருப்பார்.” என்றார். கே எல் ராகுல், முகமது சமி குறித்து தனது பேட்டியில் பேசியிருக்கிறார். மேலும் வலைப்பயிற்சியில் சமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட விதம் பற்றியும் அவர் பேசினார். முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமியின் பந்துவீச்சை புகழ்ந்துள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில்  இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா முகமது சமி குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

“மூன்றுவித போட்டிகளிலும் வைத்துப் பார்க்கையில், பும்ராவை விட முகமது சமி மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் கூறுவேன். நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக முகமது சமியை நிச்சயமாக சொல்லுவேன். தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வந்தபோது விசாகப்பட்டினம் மைதானத்தில் முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது சென்சூரியன் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இங்கிடி, ரபாடா மற்றும் பும்ரா ஆகியோரைப் போன்று முகமது சமி மாயாஜாலங்கள் செய்வதில்லை. சரியான லென்த் மற்றும் இடத்தில் பந்துவீசி எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதான் அவருக்கு பலம்.” என சோப்ரா புகழ்ந்தார்.

Mohamed:

This website uses cookies.