விராட்கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இரண்டு பக்கங்களாக பிரிந்து இருக்கின்றனர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனிஷ் கணெரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகள் இருந்துவந்த விராட் கோலி, முதலில் தனது டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதற்கு இடையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.
தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் ஒரு நாள் போட்டிக்கான தற்காலிக கேப்டனாக கே எல் ராகுல் பதவி வகித்து வருகிறார். இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் ஒருநாள் போட்டியின் போது முதல் முறையாக இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
இப்போட்டியின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் சரிவர பேசிக்கொள்ளவில்லை. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. திட்டங்களும் ஒன்று சேர்ந்து வகுக்கவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தனித் தனியாக அமர்ந்து இருந்ததாகவும், இன்னும் சில வீரர்களும் தனித்தனியாக அமர்ந்து இருந்ததாகவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
“முதல் ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். சில வீரர்களும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். கேப்டன் பொறுப்பில் இருந்தபோது விராட் கோலியின் மனநிலை எப்படி இருந்தது என பலரும் பார்த்திருப்போம். ஆனால் இம்முறை அவர் மிகவும் அமைதியாக இருந்தார். அவர் ஒரு அணியின் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் அவருக்கு எடுக்கலாம் என்று நினைக்கிறேன். இறுதி வரை இப்படியே இருந்து விடக்கூடாது என்பது எனது விருப்பம்.” என்றார்.