ஹர்திக் பாண்டியா மட்டும் இல்லை… இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி இவருக்கும் உள்ளது; முன்னாள் வீரர் ஓபன் டாக்
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக திகழ்வதற்கு இவர்தான் சரியான நபர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
சீனியர் வீரர்களை ஓரம் கட்டிவிட்டு இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை கட்டமைக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.
2022 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியவில்லை என்ற விரடக்தியில் இருக்கும் இந்திய அணி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இலங்கை அணிக்கு எதிராக இளம் வீரர்கள் கொண்ட படையை அறிவித்திருந்தது.
இந்த முயற்சி லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன்ஷிப்பை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுப்பதற்காகத்தான் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தற்போதைய இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பது சரியான முடிவு கிடையாது என்று தெரிவித்து வருவதோடு ரோஹித் சர்மாவிற்கு பிறகு லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணியை வழிநடத்தக்கூடிய திறமை யாருக்கு உள்ளது என்றும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக செயல்படுவதற்கு எல்லா தகுதிகளும் ஷ்ரேயாஸ் ஐயரிடம் உள்ளது என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அபிஷேக் நாயர் தெரிவித்ததாவது, “ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 12-18 மாதங்கள் இந்திய அணியின் ஒருநாள் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார், இந்திய அணிக்காக இவர்தான் அனைத்து கண்டிஷன்களிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தற்போதைய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு நான்காவது பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி இந்திய அணியை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். ஷ்ரேயாஸ் ஐயர் கிரிக்கெட் பற்றி நல்ல யுத்திகள் தெரிந்த ஒரு வீரர், அவர் போட்டியின் தன்மையை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு செயல்படுவார். மேலும் அணியில் இருக்கும் சக வீரர்களுக்கும் இவர் உதவியாக இருந்துள்ளார், ரோகித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியை வழிநடத்துவதற்கு ஷ்ரேயாஸ் ஐயர் சரியான நபர்.இவர் இந்திய அணியை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார்” என்று அபிஷேக் நாயர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது