ரிஷப் பண்டிர்க்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை உங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையட்டும் ; உருக்கமாக பேசிய கபில் தேவ்…
ரிஷப் பண்டின் விபத்து அனைவருக்கும் பாடமாக அமையட்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் உள்ளாகிய ரிஷப் பண்ட் உயிர்சேதத்திலிருந்து தப்பித்தாலும், கடுமையான காயங்களால் அவதிப்பட்டு வருவதால் அவர் விளையாடுவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் ரிஷப் பண்ட், 2023 உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறுவாரா என்பது கூட தெரியாமல் உள்ளது.
இதனால் ரிஷப் பண்ட் சீக்கிரமாக குணமாக வேண்டும் என்று முன்னாள், இந்நாள் வீரர்கள் உட்பட ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக அறிவுரை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கபில் தேவ் பேசுகையில், “ரிஷப் பண்டிர்க்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும், நான் சிறுவயதில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக இருக்கும் பொழுது நான் இருசக்கர வாகனத்தில் ஒரு விபத்தில் சிக்கினேன், அன்றிலிருந்து என்னுடைய சகோதரர் என்னை இருசக்கர வாகனத்தை தொடுவதற்கு கூட அனுமதிக்க மாட்டார். ரிஷப் பண்ட் விபத்திலிருந்து உயிர் தப்பி பாதுகாப்புடன் இருப்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்”.
“உங்கள் அனைவரிடமும் பார்ப்பதற்கு அழகான மற்றும் வேகமான கார்கள் உள்ளது ஆனால் அதை நீங்கள் கவனமாக கையாள வேண்டும், உங்களால் உங்களின் கார்களுக்கு ஒரு தகுதியான டிரைவரை நியமிக்க முடியும். நீங்களே தனியாக வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது, ஆனால் இதில் பெரும்பாலானோர் பொழுது போக்கிற்காகவும் தங்களுடைய ஆசைக்காகவும் இப்படி செய்கிறீர்கள். இந்த வயதில் இப்படி செய்வது என்பது சாதாரணம் தான். ஆனால் உங்கள் அனைவருக்கும் பொறுப்புகள் உள்ளது, நீங்கள் தான் உங்களை கவனமாக பார்த்துக் கொள்ள முடியும், நீங்கள் தான் உங்களுக்கான முடிவை எடுக்க முடியும்” என ரிஷப் பண்டின் விபத்தை சுட்டிக்காட்டி கிரிக்கெட் வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை கொடுத்துள்ளார்.