என்னதான் இந்தியா அணி பேட்டிங்கில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் விராட் கோலியை அணியில் இணைக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது என்று பார்த்திவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் அதனையொட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 தொடர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, பல புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு இந்திய அணியின் பேட்டிங் லைன்-அப்பில் பல பரிசோதனைகளை செய்து வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் துவக்க வீரராக செயல்பட்டு வந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா துவக்க வீரராக செயல்படுகின்றனர். மேலும் 4வது பேட்டிங் ஆர்டரில் ரிஷப் பன்ட் களமிறங்கினார்.இந்த செயல் அனைவர் மத்தியிலும் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி ஒவ்வொரு தொடரிலும் பல்வேறு விதமான மாற்றங்களை இந்திய அணி செய்து வருவது, விராட் கோலி போன்ற ஒரு சிறந்த வீரர் அணியில் இல்லாமல் போனதுதான் காரணம் என்பதை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணி பல புதிய முயற்சிகளை செய்தாலும் விராட் கோலியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்த்திவ் தெரிவித்ததாவது,“என்னதான் இந்திய அணி பல புதிய முயற்சிகளை செய்தாலும் ஆடும் லெவனில் விராட் கோலியை இணைக்கும் திட்டத்தில் தான் இந்திய அணி உள்ளது. என்னை பொருத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாட வைத்திருக்கலாம், அது விராட் கோலியின் இழந்த பார்மை மீட்டெடுப்பதற்கு ஒரு நல்ல வழியாக இருந்திருக்கும். 50 ஓவர் இருப்பதால் பொறுமையாக விளையாடி ஷிகர் தவான் மற்றும் கில் விளையாடியது போல் விளையாடியிருக்கலாம் என்று பார்த்திவ் பட்டேல் தெரிவித்திருந்தார்.
மேலும் சூரியகுமார் யாதவ் துவக்க வீரராக செயல்பட்டது குறித்து பேசிய பார்த்திவ் பட்டெல்,“போட்டிக்கு முன் ரோகித் சர்மா கூறியது போல அணியில் பல ஓட்டைகள் உள்ளது, இதனால் இந்திய அணி பலவிதமான புதிய முயற்சிகளை செய்து வருகிறது, இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்டை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணி, தற்போது சூரியகுமார் யாதவ்வை துவக்க வீரராக களமிறங்கியது. அதேபோன்றுதான் ரவீந்திர ஜடேஜா பவர் பிளேவில் வந்து வீசியதை நம்மால் காண முடிந்தது,இப்படி செய்வதன் மூலம் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பார்க்கவே இந்திய அணி இவ்வாறு செய்துள்ளது என்று பார்த்திவ் பட்டெல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.