இப்படியும் ஒரு சாதனையா..? வித்தியாசமான சாதனை படைத்த பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனாத்கட்
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள ஜெயதேவ் உனாத்கட், இதன் மூலம் வித்தியாசமான வரலாறு ஒன்றிலும் இடம்பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இந்த போட்டியில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே போல் அக்ஷர் பட்டேல் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெயதேவ் உனாத்கட் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ள சீனியர் வீரரான ஜெயதேவ் உனாத்கட், இதன் மூலம் வித்தியாசமான வரலாறு ஒன்றிலும் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் கால் பதித்த ஜெயதேவ் உனாத்கட் வெறும் 7 போட்டிகளில் இந்திய ஒருநாள் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2013ம் ஆண்டிற்கு பிறகு தற்போது விண்டீஸ் அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஜெயதேவ் உனாத்கட், இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த வீரர்கள் பட்டியலில் அமித் மிஷ்ரா, ராபின் சிங் போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
9y 252d – ஜெயதேவ் உனாத்கட் (2013-23)
7y 230d – ராபின் சிங் (1989-96)
6y 160d – அமித் மிஸ்ரா (2003-09)
6y 133d – பார்த்தீவ் பட்டேல் (2004-10)
5y 344d – ராபின் உத்தப்பா (2008-14)