ஐபிஎல் வரலாற்றை புரட்டிப்பாருங்க, ரோகித் ஷர்மா எப்படிப்பட்ட கேப்டன்னு தெரியும்.. ரோகித் சர்மா தான் இந்தியாவுக்கும் பெஸ்ட் கேப்டன்! – புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்!

“ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மாவை போன்று சாதித்தவர்கள் எவரும் இல்லை. இந்திய அணிக்கும் அவர்தான் பெஸ்ட் கேப்டனாக இருப்பார். அடுத்த சில வருடங்களுக்கு இவர் தான் வழிநடத்த வேண்டும்.” என்று ஆதரவு தந்து பெருமிதமாக பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த மோசமான தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

டாஸ் வென்று பந்துவீச்சை எடுத்தது, அஸ்வினை பிளேயிங் லெவனில் எடுக்காதது, இரண்டாவது இன்னிங்சில் பவுலர்களை சரியாக பயன்படுத்தாதது, எந்தவித திட்டமும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வந்துவிட்டார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ரோகித் சர்மா மீது வைக்கப்பட்டு வருகிறது. ரோகித் உடனடியாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ரோகித் சர்மாவை மாற்றக்கூடாது; அவர் கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டும் என்று சிலரும், புதிய கேப்டனை கொண்டு வருவதற்கு இதுதான் சரியான நேரம். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி புதிய கேப்டனுடன் களமிறங்கினால் சரியாக இருக்கும். ஆக்ரோஷமான கேப்டனாக இருக்க வேண்டும் என்று சிலரும் கூறி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தற்போது இருக்கும் இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன். அவர்தான் அடுத்த சில வருடங்களுக்கும் வழிநடத்த வேண்டும் என்று ஆதரவு கூறி, ரோகித் சர்மாவை பெருமிதமாக பேசியுள்ளார். மைக்கேல் கிளார்க் பேசியதாவது:

“ஐபிஎல் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்கள் மத்தியில் அவர்தான் பெஸ்ட் கேப்டன். அடுத்தடுத்து இரண்டு முறை பைனலுக்கு இந்தியா வந்திருக்கிறது. வேறு எந்த அணியும் இத்தகைய சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது இல்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஓராண்டாக நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஒரு போட்டியில் தோல்வியை தழுவியதால் உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்று கூறுவது சரியாகாது. 50 ஓவர் உலகக்கோப்பை வருகிறது அதில் கவனம் செலுத்துங்கள்.” என்றார் கிளார்க்.

 

 

Mohamed:

This website uses cookies.