இந்திய அணியின் மேட்ச் வின்னராக சூரியகுமார் யாதவ் திகழ்வார் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய அணியின் லிமிடெட் ஓவருக்கான ரெகுலர் வீரராக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் அதிரடியாக செயல்பட்டு சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஆனால் இவர்,நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. முதல் போட்டியில் 13 ரண்களும் இரண்டாவது போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தன்னுடைய விக்கட்டை இழந்த சூரியகுமார் யாதவ், 3வது போட்டியில் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஒரு நாள் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டியை சேர்த்து கடந்த நான்கு ஒருநாள் போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை.
அனைவருமே விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சூரியகுமாரின் ஆட்டமும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒரு சிலர் சூரியகுமாரின் மோசமான ஆட்டம் குறித்து பேசினாலும் அவருக்கான அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். மேலும் சூரியகுமார் யாதவிர்க்கு ஆதரவான தங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம், சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்வார் என்று தன்னுடைய ஆதரவான கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபா கரீம் தெரிவித்ததாவது, “என்னுடைய பார்வையில் சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்வார், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் அடித்து அசத்திய சூரியகுமார் யாதவ், ஒரு நாள் தொடரில் ரெகுலராக விளையாடுவதற்கான வாய்ப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை, ஒருநாள் போட்டியில் சிறந்த துவக்கத்தை சூரியகுமார் யாதவ் கொடுத்தாலும், அதனை நல்ல ரன்களாக மாற்று முடியவில்லை, ஆனால் இதை சர்வதேச போட்டியில் ஏற்றுக்கொள்ள முடியாது, உங்களுக்கு சிறந்த பேட்டிங் திறமை இருந்தால் நிச்சயம் அதனை அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அறிவுரையுடன் கூடிய பாராட்டை சபா கரீம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.