மாஸ் காட்டும் இந்திய இளம் படை
இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து அங்கீகாரமற்ற முதல் டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் இருவரும் அபாரமாக ஆடினர். பிரித்வி ஷா சதம் விளாசி, 136 ரன்களில் அவுட்டானார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 277 ரன்களை குவித்தனர்.
பிரித்வி அவுட்டான பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். 251 பந்துகளில் 220 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சாமர்த் 37 ரன்கள் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 24 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
இதையடுத்து ஹனுமா விஹாரியும் ஸ்ரீகர் பரத்தும் களத்தில் உள்ளனர். இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்களை குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கைவசம் இன்னும் 6 விக்கெட்டுகள் உள்ளநிலையில், தென்னாப்பிரிக்க ஏ அணியை விட 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது இந்திய ஏ அணி.
அதனால் இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இங்கிலாந்தில் அந்நாட்டு ஏ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய இந்திய ஏ அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் சிறப்பாக ஆடிவருகிறது.