இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாள் போட்டிகளில் ‘ஆல் டைம்’ வீரர்கள் பற்றிய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதற்கு ஹர்பஜன் சிங் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர். இவர் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் எல்லா காலகட்டத்திலும் ஒருநாள் போட்டிகளில் அசத்துபவர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது போல 11 வீரர்கள் கொண்ட பட்டியலைத் தயார் செய்து பதிவிட்டிருந்தார். அந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், நான்காம் இடத்தில் விராட் கோலியும், ஆறாம் இடத்தில் யுவராஜ் சிங்கும், எட்டாம் இடத்தில் ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங்கும் பதினொன்றாம் இடத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவும் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியிருந்தார். இதனைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங் “இந்தப் பட்டியலில் சேவாக் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த வாசிம் வீருவை உள்ளே கொண்டு வர இதில் நீங்கள் யாரை கைவிடூவிர்கள் என கேள்வி எழுப்பினார் . இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்தாண்டு தன்னுடைய 40 ஆவது வயதை எட்டவிருக்கிறார், இருந்தாலும் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பாக டி 20 போட்டியில் விளையாடும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 4 இறுதிப்போட்டியில் விளையாடி உள்ள ஹர்பஜன் சிங், இந்தியாவுக்காக விளையாடும் திறமையும் அனுபவமும் இன்னும் தனக்கு இருப்பதாக நம்புகிறார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் தொடர்களில் ஒன்று தான் ஐபிஎல். ஐபிஎல் தொடரில் மைதானங்கள் சிறியவை, உலகில் உள்ள தலைசிறந்த வீரர்கள் அனைவரும் இதில் விளையாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக பந்துவீசுவது சுலபமான விஷயம் அல்ல. அப்படிப்பட்ட ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீச முடியும் என்றால் சர்வதேச போட்டிகளிலும் முடியும். பவுர் பிளேவில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளையும் எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.