விராட் கோஹ்லியின் மிகப்பெரும் பலம் இது தான்; பேட்டிங் பயிற்சியாளர் சொல்கிறார் !!

விராட் கோஹ்லியின் மிகப்பெரும் பலம் இது தான்; பேட்டிங் பயிற்சியாளர் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியின் பேட்டிங் ஸ்டைல் குறித்தான பல தகவல்களை பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஓபனாக தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காத நிலையில், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் உலக லெவன், சமகால பெஸ்ட் லெவன் ஆகிய அணிகளை தேர்வு செய்துவருகின்றனர். அதே போல் முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலமும் ரசிகர்களுடன் கலைந்துரையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான விக்ரம் ரத்தோர் சமீபத்தில் முகநூல் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

அந்த லைவில் கேப்டன் விராட் கோஹ்லி குறித்து விக்ரம் ரத்தோர் பேசியதாவது;

இந்திய கேப்டன் விராட் கோஹ்லி குறித்த வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், ஆட்டத்தின் மீது அவருக்கு உள்ள அர்ப்பணிப்பு தான். உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோஹ்லி கடினமாக உழைத்து வருகிறார். நான் பார்த்தமட்டில், மிக கடினமான உழைக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் அவர் தான்.

அதுமட்டுமின்றி சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது பேட்டிங் ஸ்டைலை விரைவில் மாற்றிக்கொள்வது கோஹ்லியின் மிகப்பெரிய பலமாகும். அவர் எப்பொழுதும் ஒரே மாதிரியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் அல்ல. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி என்று ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் வெவ்வேறு விதமான ஆட்டங்களை வெளிப்படுத்தக்கூடியவர்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 4 சதங்களுடன் 40 சிக்சர்களை அடித்து நொறுக்கினார். அப்போது அவர் சூப்பர் பார்மில் இருந்தார். அந்த ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று விளையாடியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 மாதங்கள் அதிரடி ஜாலம் காட்டிய அவர் அதன் பிறகு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் டெஸ்டிலேயே இரட்டை சதம் அடித்தார். இது போன்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதே விராட் கோஹ்லியின் மிகப்பெரும் பலம் என்று விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.