“இவரால 2 உலகக்கோப்பை போச்சு” வேற ஆள மாத்துங்க.. முன்னாள் பயிற்சியாளர் காட்டம்

ரவி சாஸ்திரியின் தலைமையில் இருமுறை உலகக்கோப்பையை இழந்துள்ளோம். அதனால் இவரை மாற்றிவிடுங்கள் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராபின் சிங் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர்களில் அரை இறுதிப் போட்டி வரை இந்திய அணி எளிதில் சென்றுவிடுகிறது. அதன் பிறகு கோப்பையை வெல்லும் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அரை இறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறி ஏமாற்றி வருவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நடைபெற்றது முதல் முறையல்ல, இதற்கு முன்னர் மூன்று முறை இப்படி அரை இறுதியுடன் இந்தியா வெளியேறி இருக்கிறது.

குறிப்பாக 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து இரு முறை அரையிறுதி வரை சென்றது இந்தியா வெளியேறி இருப்பது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியிருக்கிறது.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரவி சாஸ்திரி இருந்துள்ளார். தற்போது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவியில் இருந்துள்ளார்.

இவர் தலைமையில் அடுத்தடுத்து இரு முறை இந்திய அணி அரையிறுதியுடன்  வெளியேறி இருக்கிறது. ஆதலால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு தலைமை பயிற்சியாளர் பதவியை அளித்து பிசிசிஐ பரிசோதித்துப் பார்ப்பது சிறந்ததாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ரவி சாஸ்திரி தலைமையில் இரு முறை இந்திய அணி உலக கோப்பை இழந்து இருக்கிறது. ஒரு முறை சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஒரு முறை டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து பல கோப்பைகளை இழந்திருக்கிறது. அதனால் இம்முறை தலைமை பயிற்சியாளர் பதவியில் சில மாற்றங்களை நான் எதிர்பார்க்கிறேன். இந்த தோல்விகளை கருத்தில் கொண்டு பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.