தென் ஆப்ரிக்காவை இந்திய அணியால் வீழ்த்த முடியுமா..? சீனியர் வீரர் ஓபன் டாக்
தென் ஆப்ரிக்காவை விட இந்திய அணி பலம் பொருந்திய அணியாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான அமித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கவுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த தொடரின் முதல் டி.20 போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான அமித் மிஷ்ரா, தென் ஆப்ரிக்கா அணியை விட இந்திய அணி பலம் பொருந்திய அணியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமித் மிஷ்ரா பேசியதாவது;
அவர்களை விட நாம் மிகச்சிறந்த அணி, அவர்களை விட நம்மிடம் நல்ல பேட்டிங் ஆர்டர் உள்ளது, அதே போல் பந்துவீச்சிலும் நாம் முழு பலம் பெற்றுள்ளோம். அதிலும் குறிப்பாக நம்மிடம் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் வேகப்பந்து வீச்சில் மட்டும் இரு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகளாகவே உள்ளன. இந்த தொடர் மிகவும் சவால் நிறைந்த தொடர் தான் என்றாலும் இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகம்” என்றார்.