அடுத்தடுத்த போட்டிகளில் படுத்தோல்வி; ஒருநாள் போட்டிக்கான புள்ளிப்பட்டியளில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் உலககோப்பை சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்தது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே விளையாடி முடித்து விட்டன. இவை இரண்டும் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 374 ரன்கள் அடிக்க, இந்த இலக்கை துரத்த முடியாமல் இந்திய அணி 308 ரன்களுக்கு ஆட்டமிழந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதேபோல இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் சதம் விளாசினார். வார்னர், பின்ச், மேக்ஸ்வெல் மற்றும் லபுச்சனே ஆகியோர் அரைசதம் அடிக்க 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமைந்தாலும் மிடில் ஆர்டரில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்து வந்ததால் இந்திய வீரர்களால் குறிப்பிட்ட இலக்கை நெருக்க முடியவில்லை. இருப்பினும் படுமோசமாக அவர்கள் ஆட்டமிழக்கவில்லை.

விராட் கோலி, கே எல் ராகுல் இருவரும் அரைசதம் கடக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 338 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி ஒருநாள் போட்டிக்கான தொடரையும் இழந்தது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை சூப்பர் லீக் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதே நேரம் ஆஸ்திரேலிய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணி 30 புள்ளிகளுடன் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் இரண்டாம் தேதி கேன்பெரா மைதானத்தில் துவங்க இருக்கிறது.

Mohamed:

This website uses cookies.