அவர்கள் தோற்று எங்களை வெளியேற்றுவார்கள்: பாகிஸ்தான் முன்னால் வீரர் கதறல்

நாங்கள் எவ்வளவு முயன்றாலும் எங்களை அரையிறுதிக்குள் வரவிடாமல் இந்திய அணி முயற்சிப்பார்கள், நாங்கள் வருவதை விரும்பமாட்டார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு மோசமான தொடக்கம்தான் இருந்தது. முதல் போட்டியில் மே.இ.தீவுகளிடம் தோற்றது பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

3-வது போட்டி மழையால் ரத்து, 4-வது போட்டியில் இந்தியாவிடம் தோல்வி, 5-வது போட்டி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி, 6-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் வெற்றி, 7-வது போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்.

இதனால், பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 7 புள்ளிகளுடன் உள்ளது.

இன்னும் பாகிஸ்தான் அணிக்கு வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுடன் போட்டி இருக்கும் நிலையில் இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் செல்வதை இந்திய அணி தடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக கடந்த 1993 முதல் 1996-ம் ஆண்டுவரை 19 டெஸ்ட் போட்டிகள், 50 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பாசித் அலி பங்கேற்றபோது, அவரிடம் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் வருவதை இந்திய அணியால் தடுக்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியது:

எங்களை நிச்சயம் இந்திய அணி அரையிறுதிக்குள் வரவிடமாட்டார்கள் என்றே தெரிகிறது. நாங்கள் அரையிறுதிக்குள் வருவதை இந்திய அணியினர் விரும்பமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியதைப் பார்த்தீர்கள் என்றால் புரிந்திருக்கும். இந்திய அணிக்கு வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணியுடன் போட்டி இருக்கிறது. இதில் இலங்கை, வங்கதேசம் அணியுடன் வேண்டுமென்றே இந்திய அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணியை அரையிறுதிக்குள் வரவிடாமல் செய்வார்கள்.

இந்திய அணி வேண்டுமென்றே அவ்வாறு விளையாடி தோற்றால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதானே. ஆப்கானிஸ்தானிடம் இந்திய அணி எப்படி வென்றார்கள்.

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எவ்வாறு விளையாடியது, டேவிட் வார்னர் என்ன செய்தார். தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் ‘பேஷனாகிவிட்டது’.

கடந்த 1992-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் என்ன நடந்தது தெரியுமா. நியூஸிலாந்து அணி வேண்டுமென்றே பாகிஸ்தானிடம் லீக் ஆட்டத்தில் தோற்று அரையிறுதியை தங்கள் நாட்டில் விளையாட வேண்டும் என்று விரும்பியது. ஆனால், அரையிறுதியில் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம் என்பது வேறுகதை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் கேட்டால், அவர் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாகக் கூறுவார், நியூஸிலாந்து அணி எங்களிடம் 1992-ல் வேண்டுமென்றே தோற்று.

அதுபோல எங்களை அரையிறுதிக்குள் வரவிடாமல் தடுக்க இந்திய அணி வேண்டுமென்றே தோற்கும்

இவ்வாறு பாசித் அலி பேசினார்.

 

Sathish Kumar:

This website uses cookies.