கொரோனா வைரஸ் எதிரொளி: பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் புதிய யுக்தி!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் பந்தில் எச்சில் தொட்டு தேய்க்க மாட்டோம் என்று இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் இருந்துவருகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பதுதான் முக்கிய நடவடிக்கையாக இருந்துவருகிறது. அதன் காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் கூடும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய ஏழு வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ குழுவிடம் தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. வெளியாட்களுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, கை குலுக்குவது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக மருத்துவக் குழுவினருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனிடையே மைதானத்தில் பந்தின் மீது எச்சில் தொட்டு தேய்ப்பதை குறைத்துக் கொள்ள உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புவனேஷ்வர் குமார், மருத்துவக் குழுவினர் தங்களுடன் இருப்பதாகவும், அவர்கள் வழங்கும் ஆலோசனைப்படி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்

இந்நிலையில் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் கூடும் ஐபிஎல் போட்டியை நடத்தினால் அது சர்வேதச அளவில் எதிர்க்குரல்களை எழுப்பலாம். அதுமட்டுமின்றி இந்திய சுகாதாரத்துறையே மக்கள் நலன் தான் முக்கியம், போட்டிகள் எல்லாம் பின்னர் தான் என அறிவித்திருப்பதால் அரசே இதனை அனுமதிக்காது என்பதும் தெரிகிறது. இருப்பினும் விளையாட்டை நிறுத்தமாட்டோம் மக்கள் கூடுவதை தான் நிறுத்துவோம் என மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரேண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேச்சின்படி, பார்த்தால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஆனால் ரசிகர்கள் கூட மாட்டார்கள் என்றே தெரிகிறது.

இந்தப் பிரச்னை ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கொடுப்பதில் பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வரவுள்ளனர். அவர்களை அனுமதிப்பதிலும் சிக்கல் ஏற்படலாம். தற்போது நடக்கும் இந்தியா – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியே பல்வேறு ஆலோசனைகள், நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அத்துடன், பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. இப்படி இருக்க பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் வரும் போது கூடுதல் கெடுபிடி இருக்கலாம் அல்லது வெளிநாட்டு வீரர்கள் இன்றிகூட ஐபிஎல் நடக்கலாம் எனப்படுகிறது. இதற்கெல்லாம் விடைதேடும் வகையில் நாளை மறுநாள் (மார்ச் 14) ஐபிஎல் நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஐபிஎல் தொடர்பான பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.