உலக கோப்பை சென்ற இந்திய அணியில் நான்காவது இடத்தில் இந்த வீரர் இல்லாததால் கோப்பையை தவற விட்டு நாடு திரும்பினோம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராபின் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் நாடாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் கத்துக்குட்டி அணியாக எண்ணப்பட்ட நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெறும் கையுடன் நாடு திரும்பியது.
கோப்பை கனவுடன் இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பல கோடி இதயங்களை இத்தருணம் சுக்குநூறாகியது.
இந்திய அணியின் துவக்க வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தொடர் முழுவதும் நடுத்தர பேட்டிங் வரிசை வரிசை இந்திய அணிக்கு மிகவும் கேள்விக்குறியாக அமைந்தது.
இதுவே கோப்பை இழக்க காரணமாக இருந்தது என பல விமர்சனங்களும் கருத்துக்களும் வெளியாகிய நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராபின் சிங் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அஜின்க்யா ரஹானேவிற்கு ஆதரவாக பேசிய இவர், அனுபவமிக்க ரஹானே நான்காவது இடத்திற்கு சரியாக இருந்திருப்பார் என்பதையும் பதிவிட்டார். மேலும் அவர் கூறுகையில்,
“ரஹானே மற்றும் ராயுடு இருவரும் நான்காவது இடத்திற்கு என்னுடைய தேர்வாக இருந்தார்கள். குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் ரஹானே மிகவும் சிறப்பாக ஆடக்கூடியவர். இக்கட்டான தருணங்களில் பந்துவீச்சின் போக்கிற்கு ஏற்ப மைதானங்களை புரிந்துகொண்டு ரஹானே நிலைத்து ஆடக்கூடியவரும் கூட. அரையிறுதி போட்டிக்கு பிறகு ரஹானே அருமை அனைவருக்கும் புரிந்திருக்கும்.
எனக்கு தற்போது வரை அவரை விட்டுவிட்டு ஏன் அனுபவமில்லாத வீரர்களை அணியில் எடுத்தார்கள் என்பது விளங்கவில்லை” என்றார்.