டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தொடக்க ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் இந்திய வீரர்கள் பட்டையை கிளப்பினர். குறிப்பாக முதல் முறையாக டெஸ்டில் தொடக்க வீரராக இறங்கிய ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்ததோடு மொத்தம் 13 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்தார். மயங்க் அகர்வாலின் இரட்டை சதமும் கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தன.
பந்து வீச்சை பொறுத்தவரை முதல் இன்னிங்சில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை அள்ளினார். 2-வது இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 போல்டு உள்பட 5 விக்கெட்டுகளை கபளகரம் செய்தார். அதே உத்வேகத்துடன் இந்திய அணியினர் இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்த ஆயத்தமாகியுள்ளனர். இந்த டெஸ்டிலும் இந்தியா வாகை சூடினால், அது உள்ளூரில் இந்தியா தொடர்ச்சியாக வெல்லும் 11-வது தொடராக அமையும். அவ்வாறு நிகழ்ந்தால் அது புதிய சாதனையாக பதிவாகும். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் தாக்கம் கணிசமாக இருக்கும்.
கேப்டனாக 50-வது டெஸ் டில் கால்பதிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முகமது ஷமி பொறுப்பை எடுத்துக் கொண்டு பந்து வீசுகிறார். அதனால் அவருக்கு மேற்கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்ட பகுதியில் பந்து வீச வேண்டும் என்று சொல்ல வேண்டியதும் இல்லை.
ரோகித் சர்மா தொடக்க வீரராக இதே போன்று தொடர்ந்து ஆடினால், பெரும்பாலான டெஸ்டுகளில் நமக்கே வெற்றி வாய்ப்பு உருவாகும். அவர் ஆடிய விதம் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. சிவப்பு நிற பந்திலும் அவர் அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டிய நேரம் இது. ஊடகத்தினர் அவர் மீது கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.
அணிகள்:
தென்னாப்பிரிக்கா : டீன் எல்கர், ஐடன் மார்க்ராம், தியூனிஸ் டி ப்ரூயின், டெம்பா பவுமா, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), குயின்டன் டி கோக் (கீ), செனுரன் முத்துசாமி, வெர்னான் பிலாண்டர், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே
இந்தியா : மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (கீ), ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி