இந்திய – பாக் வீரர்கள் இணைந்து ஒரே அணியில் விளையாடப் போகும் டி20 போட்டி: பிசிசிஐ புதிய அறிவிப்பு!

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக லெவன் அணி, ஆசிய லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து விளையாடுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது

வங்கதேசத்தின் தேசத்தந்தை முஜிபுர் ரஹ்மான் நினைவையொட்டி உலக லெவன் அணி, ஆசிய லெவன் அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டி 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி 21-ம் தேதி டாக்கா நகரில் நடத்தப்பட உள்ளது.

இந்தியப் போட்டியில் பங்கேற்க ஆசியலெவன் அணிக்காக இந்திய அணியில் இருந்து 5 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.ஆசிய லெவன் அணியில் இந்திய அணி வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்களும் இணைந்து விளையாட வேண்டிய நிலையில் உள்ளனர்.


ஆனால், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரசியல்ரீதியான உறவு மிகவும் மோசமடைந்ததால், கடந்த 7 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. ஆனால் இரு அணிகளும் பொது இடத்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளன.

ஆனால், ஆசியலெவன் அணி எனும்போது, இரு அணி வீரர்களும் ஒரே அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும். ஆனால், இரு நாட்டு உறவுகள் மோசமாக இருக்கும் போது இரு அணி வீரர்களும் ஒரே அணியில் இடம் பெற்று விளையாடுவார்களா என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும். நட்பு ரீதியான போட்டி என்றாலும், இரு நாட்டு உறவுகள் மோசமடைந்திருப்தால் அது சாத்தியமா எனத் தெரியவில்லை. விளையாட்டுக்கு அரசியல், மதம், இனம், பகை ஏதும் இல்லை என்று கூறப்பட்டாலும், இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் ரீதியான பிரச்சினை விளையாட்டில் எதிரொலிப்பது தொடர்ந்து வருகிறது.

ஆசிய லெவனில் பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களும் இணைந்து விளையாடுவார்களா என்று பிசிசிஐ செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜிடம் டெல்லியில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், ” வங்கதேசத்தில் நடக்கும் ஆசியலெவன், உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்கள் விளையாடுவதற்குச் சாத்தியங்கள் இல்லை. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை நடத்த உள்ளார்” எனத் தெரிவித்தார்

இந்தியா பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையிலான உறவுகளும் சமீபத்தில் பாக். வாரியத்தன் தலைவர் கருத்தால் கசப்படைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் கராச்சியில் நிருபர்களிடம் பேசிய இஷான் மானி கூறுகையில், ” இலங்கை அணி எங்கள் நாட்டில் டெஸ்ட் போட்டி விளையாடியதன் மூலம் 100 சதவீதம் பாதுகாப்பானது என்பதை நிரூபித்துவிட்டோம். சிலர் இங்கே வராதநிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பில்லாதது என்று கூறுவதை நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாதான் அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடு.

இலங்கை டெஸ்ட் போட்டி முடிந்தபின் ஒருவரும் பாதுகாப்புக் குறைபாடு குறித்துக் குறைசொல்லமாட்டார்கள். இது பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மறுமலர்ச்சி. உலக அளவில் பாகிஸ்தான் தோற்றத்தை உயர்த்திக் காட்டியபங்கு ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் உண்டு” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathish Kumar:

This website uses cookies.