இந்தியா இலங்கை இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி.20 போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட க்ரூணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 சீனியர் வீரர்கள் அனைவரும் நடப்பு டி.20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ள நிலையில், இரண்டாவது டி.20 போட்டியின் போது காயமடைந்த நவ்தீப் சைனியும் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நவ்தீப் சைனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் இன்றைய போட்டியில் அர்ஸ்தீப் சிங் அல்லது சந்தீப் வாரியர் ஆகிய இருவரில் ஒருவர் அறிமுக வீரராக களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது.
பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் சொதப்பிய நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இன்றைய போட்டியிலாவது சிறப்பாக செயல்பட்டு, கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதுதவிர கடந்த போட்டியில் விளையாடிய ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா போன்ற வீரர்கள் அனைவருக்கும் இன்றைய போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ஷிகர் தவான், தேவ்தட் படிக்கல், ருத்துராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாஹர், சேத்தன் சக்காரியா, அர்ஸ்தீப் சிங்/ சந்தீப் வாரியர்.