இந்தியாவில் நடைபெறுகிறது டி.20 உலகக்கோப்பை; ரசிகர்களுக்கு குட் நியூஸ்
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பையை இந்தியாவில் வைத்த நடத்த ஐ.சி.சி., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கதிற்கு கிரிக்கெட் விளையாட்டு மட்டும் விதிவிலக்கா என்ன..? கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நடைபெற இருந்த பல்வேறு முக்கிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டும் வருகிறது. மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற இருந்த டி.20 உலகக்கோப்பை 2022ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை தங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. ஆனால் 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.,யின் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடைபெற்றது. டி.20 உலகக்கோப்பை குறித்து பல்வேறு விசயங்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை (அக்டோபர்-நவம்பர்) திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவது என்றும், தள்ளிவைக்கப்பட்ட 20 ஓவர் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.