தென்னாபிரிக்காவை வதம் செய்து.. சிக்சரில் புதிய சாதனையை படைத்தது இந்தியா!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்து டெஸ்ட் அரங்கில் புதிய வரலாறு படைத்திருக்கிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் மூன்று போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 497 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதில் துணை கேப்டன் ரஹானே 115 ரன்களும், ரோகித் சர்மா முதல்முறையாக டெஸ்ட் அரங்கில் இரட்டை சதத்தையும் பதிவு செய்தார். இவர் 212 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இதில் 28 பவுண்டரிகளும் 6 சிக்சர்கள் அடங்கும்.

இவரை அடுத்து வந்த வீரர்கள் அணிக்கு ஓரிரு ரன்களை சேர்க்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் உச்சத்தை தொட்டது. கடைசியாக வந்து கேமியோ காட்டிய உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர் 5 சிக்ஸர்கள் அடித்து வானவேடிக்கை காட்டினார்.

இத்தொடரில் இந்திய அணி இதுவரை 47 சிக்சர்கள் அடித்திருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும். இதற்கு முன்னர் 2013-14 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 40 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இதனை இந்தியா முறியடித்து வரலாறு படைத்திருக்கிறது.

மூன்றாம் இடத்தில் 37 சிக்சர்களுடன் பாகிஸ்தான் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்தியா-தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டியை பார்த்தால், இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா டி காக், டீன் எல்கர் இருவரையும் இழந்து 9/2 என்ற நிலையில் தடுமாறி வருகிறது. தற்போது வரை இந்தியா 488 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

Prabhu Soundar:

This website uses cookies.