ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம் அடிக்க வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் உடனான இருபது ஓவர் தொடரை இந்தியா, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகள் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், கேதர் ஜாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஹெட்மயர், பூரன், ராஸ்டன் சேஸ், பொல்லார்ட், ஹோல்டர், கீமோ பவுல், வால்ஷ், அல்சாரி ஜோசப், காட்ரல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லோகேஷ் ராகுல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
இதனால் இந்தியா 7 ஓவரில் 25 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கையுடன் பந்தை எதிர்கொண்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இருவரும் நிதானமாக விளையாட இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. ஆனால் 19-வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 56 பந்தில் 6 பவுண்டரியுடன் அந்த ரன்னை எடுத்தார்.
அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர்.
அப்போது இந்தியாவின் ஸ்கோர் 36.4 ஓவரில் 194 ரன்கள் எடுத்திருக்கும்போது ஷ்ரேயாஸ் அய்யர் 88 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 39.4 ஓவரில் 210 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பந்த் 69 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 71 ரன்கள் சேர்த்தார்.
கேதர் ஜாதவ் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஷிவம் டுபே அதிரடி ஆட முயன்றார். அவர் 9 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்கிறது.