டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் டி20 போட்டிகள் நிலைத்து நிற்காது என்று நியூஸிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர்சர் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் ரிச்சர்ட் ஹாட்லி கூறியதாவது:
டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் ஆகிய மூன்றிலுமே சரிசமமான அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். தற்போது அதிக அளவில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்டுக்கு அடிப்படையான விஷயமே டெஸ்ட் போட்டிகள்தான்.
எனவே அதை நாம் புறக்கணிக்கக்கூடாது. எனவே அடிக்கடி டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கு வழிவகை செய்யவேண்டும்.
டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டது நிச்சயம் புரட்சிகரமான விஷயம்தான்.அதனால் ஏராளமான சிறந்த வீரர்கள் நமக்குக் கிடைத்துள்ளனர்.
ஆனாலும் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளும் இருக்கவேண்டும். டெஸ்ட் போட்டிகள் இல்லாமல் டி20 போட்டிகள் நிலைக்காது. பழமையான டெஸ்ட்போட்டிகளை நாம் தொடராவிட்டால் டி20 போட்டிகளும் காணாமல் போய்விடும். அதற்கும் நாம் முன்னுரிமை தரவேண்டும். உலக கிரிக்கெட்டை டி20 போட்டிகள் ஆள்வதை நான் வெறுக்கிறேன்.
டி20 கிரிக்கெட் போட்டி உண்மையான கிரிக்கெட் போட்டிகளே அல்ல. உண்மையான கிரிக்கெட் போட்டி எதுவென்றால் அது டெஸ்ட் கிரிக்கெட்தான். இவ்வாறு அவர் கூறினார்