எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடை போட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும், அடுத்ததாக அக்டோபர் மாதம் துவங்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது.
பாகிஸ்தான் போன்ற அணிகள் ஆசிய கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியே, டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியாகவும் இருக்க வாய்ப்புள்ளதால், இந்திய அணியின் தேர்வாளர்கள் அணி தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
என்னதான் இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளை சந்தித்து வந்தாலும், இந்த அணியால் டி.20 உலகக்கோப்பையை சமாளிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். சீனியர் வீரர்களான கே.எல் ராகுல், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, சூர்யகுமார் யாதவை இந்திய அணி எப்படி பயன்படுத்த போகிறது என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் குறிப்பாக காயம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் எப்போது திரும்புவார்..? அணியில் இடம்பெற்றாலும் அவரால் பழையபடி விளையாட முடியுமா ..? அவருக்கான மாற்று ஏற்பாடு என்ன என முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல் ராகுலுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவே நியமிக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க இன்னும் 2 மாதங்களே உள்ளநிலையில், இந்திய அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுல் காயம் மற்றும் உடற்தகுதியால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு உலகக் கோப்பை டி20 அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே தற்போது கிரிக்கெட் தொடர்களில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு, துணைக் கேப்டன் பதவி வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரின் ஆதரவும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.