ரோகித் சர்மா மீது பிசிசிஐ நம்பிக்கை வைத்தது போல எங்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வைக்கவில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா போல பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அங்கும் பொது முடக்கம் அமலில் இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களிடையே பேசி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் உரையாற்றினார். அப்போது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீதான சில வருத்தங்களை பதிவு செய்தார். இது பாகிஸ்தானில் இப்போது வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பேசிய அவர் ” பாகிஸ்தான் வீரர்களிடம் ஒருவிதமான பயம் இருக்கிறது. அதாவது ஒன்றோ அல்லது இரு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியிலிருந்து தூக்கப்படுவோம் என்ற பயம்தான் அது. இந்த பயம் வீரர்களின் திறனை பாதிக்கும். சில போட்டிகளில் சரியாக பங்காற்றவில்லை என்றால் அவர்களை ஒதுக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் “கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இதுதான் வீரர்கள் தொடர்ந்து சீராக விளையாடாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலை உலகில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியிலும் இல்லை. உதாரணத்துக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா தொடக்க காலத்தில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்த அந்நாட்டு வாரியம் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியது. இப்போது அவர் ஜொலிக்கிறார்” என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளாகர் இமாம்.
இந்நிலையில், பச்சை பசேல் என இருக்கும் பிட்சை (மைதானத்தை) பார்த்தால் எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிட முகமுது ஷமி விருப்பப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீட்டில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே உரையாடி வருகின்றனர். சிலர், இன்ஸ்டாகிராம் வழியாக மற்ற வீரர்களுடன் பேசி வருகின்றனர். இதைப் போலவே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிஜஸூடன் தொலைக்காட்சி மூலம் காணொலியில் ரோகித் சர்மா உரையாடினார். அப்போது ஜாலியாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியும் ஒன்றாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர்கள். எனவே ஷமி குறித்து பகிர்ந்துக்கொண்ட அவர் “வலைப் பயிற்சிகளின்போது எப்போதும் எங்களுக்கும் பச்சைப் பசேலென இருக்கும் பிட்ச் மட்டுமே கிடைக்கும். அதைப் பார்த்தவுடன் ஷமி குஷியாகிவிடுவார், எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிடும் வெறியோடு அன்றைய தினம் சிறப்பாக பந்துவீசுவார்” என்றார்.