ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நேற்று நாடு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜூனியர் உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 4-வது முறையாக பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை (3 முறை சாம்பியன்) பின்னுக்கு தள்ளி அதிக முறை உலக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது.
கோப்பையை கைப்பற்றிய இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியினர் நேற்று பிற்பகலில் மும்பை திரும்பினார்கள். விமான நிலையத்தில் வீரர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது ஆட்ட காலத்தில் உலக கோப்பையை வென்றது இல்லை என்ற கவலையை நான் என்னுடன் எடுத்து செல்வது கிடையாது. எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது. அத்துடன் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நமது வீரர்கள் கடினமாக உழைத்து தங்கள் இலக்கை எட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாம்பியன் அணியாக திரும்பி இருப்பது நல்ல விஷயமாகும்.
பாகிஸ்தானுக்கு எதிரான அரைஇறுதிப்போட்டிக்கு என்று நாங்கள் வித்தியாசமாக எதுவும் தயாராகவில்லை. மற்ற ஆட்டங்களை போல் தான் அந்த ஆட்டத்துக்கும் தயாரானோம். அதனை நமது அணி வீரர்கள் பெரிய போட்டி என்று உணர்ந்து இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.
இந்திய ஜூனியர் அணியின் கேப்டனான மும்பையை சேர்ந்த பிரித்வி ஷா அளித்த பேட்டியில், ‘உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் என்ற முறையில் எனது உணர்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. இந்த தருணத்தில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு இது ஒரு கடினமான பயணம். தொடக்கத்தில் நான் மும்பையின் புறநகர் பகுதியில் இருந்தேன். தினசரி 2 மணி நேரம் ரெயிலில் பயணித்து தான் பயிற்சிக்கு வர வேண்டும்.