இந்திய அணியை அவமதித்த ஆஸ்திரேலிய ஊடகம்; கழுவி ஊற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி குறித்து தரக்குறைவாக செய்தி வெளியிட்டு வரும் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு, ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்லும் வெளிநாட்டு அணிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும், செய்தி வெளியிடுவதையும் அங்குள்ள ஊடகங்கள் சில வாடிக்கையாக வைத்துள்ளன. தென் ஆப்பிரிக்க, இந்திய, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகள் அங்கு விளையாடும் போது கிண்டல் செய்திகள் தொடர்ந்து வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி சென்றிருந்தபோது இந்திய அணியின் தோல்வியை விமர்சித்துக் கிண்டல் செய்து செய்தி வெளியிடப்பட்டது.
அடிலெய்ட் மைதானத்தில் வரும் 6-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி அடிலெய்ட் போய் சேர்ந்தவுடன் அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு நாளேடு ஒன்று இந்திய அணியைக் கிண்டல் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கத்தைக் காட்டிலும், ஆஸ்திரேலியாவுக்கும் கடும் மிரட்டல் விடுக்கும் வகையில் மிக வலிமையுடன் இந்திய அணி இருப்பதால், அவர்களின் மனவலிமையைக் குலைப்பதற்காக இதுபோன்ற செய்தியை ஆஸி. ஊடகம் வெளியிடுகிறதா எனத் தெரியவில்லை.
இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தைபதிவிட்டு, ‘தி ஸ்கார்டி பேட்ஸ்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, வேகப்பந்துவீச்சைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள், பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பார்த்து பயப்படுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய அணி அனைத்துக்கும் அச்சப்படுபவர்கள் என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்திக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உண்மையான கிரிக்கெட் கலாச்சாரம் இதுவல்ல, இதுபோன்ற செய்திகள், நமது கிரிக்கெட் கலாச்சாரத்தை மேலும் நாசமாக்கும் என்று கண்டித்துள்ளனர்.