இந்த வாய்ப்பை தவறவிட்டு விடாதீர்கள்; இந்திய அணிக்கு சச்சின் அட்வைஸ்
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கிடைத்துள்ள வாய்ப்பை வீணடித்து விட வேண்டாம் என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்னும் 7 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் சதநாயகன் புஜார 40 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வினை வைத்துக் கொண்டு ஸ்கோரை இன்னமும் வலுப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு உற்சாகமூட்டும் விதமாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது:
இப்போதைய நிலவரப்படி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்ல எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. நாளை (4ம் நாள்) ஆஸ்திரேலியா முதல் 2 மணி நேர ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினால்தான் ஆட்டத்தில் நிற்க முடியும். இல்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா 0-1 என்று தோல்வியுடன் தான் செல்ல முடியும்.
இவ்வாறு சச்சின் இட்ட ட்வீட்ட்டை ஆயிரக்கணக்கானோர் மறு ட்வீட் செய்ய, 8,000த்துக்கும் மேலான லைக்குகள் அள்ளியுள்ளது.
கோஹ்லியை சீண்டிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்;
பேட்டிங் செய்ய இந்திய கேப்டன் கோஹ்லி களமிறங்கிய பொழுது, அரங்கத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் கூட்டமாக சேர்ந்து கொண்டு, கோஹ்லியை கிண்டலடிக்கும் விதமாக கூச்சலிட்டனர். ஆனால் கோஹ்லி அதனை சட்டை செய்யாமல் களத்திற்குள் சென்றார்.
இந்நிலையில் இந்த நிகழ்விற்கு ஆஸ்திரேலிய வீரர்களான ரிக்கி பாண்டிங், டர்வீஸ் ஹெட் போன்றவர்களே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ஒரு கிரிக்கெட் வீரனாக இது மாதிரியான நிகழ்வுகளை முற்றிலுமாக வெறுக்கிறேன். ஆஷஸ் தொடரின் போது நானும் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். இது எல்லாம் ஏற்று கொள்ள தக்க விசயம் அல்ல” என்றார்.