என்னடா இவ்வளவு கேவலமா விளையாடுறீங்க; சச்சின் காட்டம்
சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி திணறி வருவது ஆச்சரியமாக உள்ளதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்ட்டில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் அபார சதத்தால் 250 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே இந்திய அணியின் கடைசி விக்கெட்டாக ஷமி அவுட்டானார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே இஷாந்த் சர்மாவால் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ், ஷான் மார்ஷ் ஆகிய இருவரும் அஷ்வினிடம் வீழ்ந்தனர். நிதானமாக ஆடிய அந்த அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜாவையும் அஷ்வின் வீழ்த்தினார்.
கவாஜை தொடர்ந்து ஹேண்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன், கம்மின்ஸ் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் தெளிவாக ஆடிவரும் டிராவிஸ் ஹெட், அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 191 ரன்களை எடுத்துள்ளது.
சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு, அதன் மண்ணில் வைத்தே கடும் நெருக்கடி கொடுத்தனர் இந்திய பவுலர்கள். அதிலும் அஷ்வின் முக்கியமான கவாஜாவின் விக்கெட் உட்பட வரிசையாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல வேகத்தில் மிரட்டிய இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவில் வைத்தே அந்த அணியை இந்திய அணி மிரட்டியது. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தவே கிடையாது. அவர்கள் விக்கெட்டை இழக்காமல் இருப்பதற்காக டிஃபென்ஸ் ஆடி சிறிது சிறிதாக ரன்களை சேர்த்தனர்.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த வாய்ப்பை நழுவவிடாமல் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த மண்ணில் டிஃபென்ஸ் ஆடுவதை என் அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. இந்திய அணியை இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தவைத்தது அஷ்வின் தான் என்று சச்சின் டுவீட் செய்துள்ளார்.