இந்திய அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரில் தோல்வியில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் இங்கிலாந்து அணி அஸ்வினை சமாளிக்க பழக வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே போன்ற மிக முக்கிய வீரர்களே சற்று சொதப்பினாலும், ஆல் ரவுண்டரான அஸ்வினோ பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பமனாக திகழ்ந்து வருகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியை விட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் மிரட்டி அஸ்வினை சமாளிக்கவே முடியாமல் இங்கிலாந்து அணி கடுமையாக திணறி வருகிறது.
இங்கிலாந்து அணியுடனான நடப்பு டெஸ்ட் தொடரின் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி வரும் அஸ்வினை, முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீரும் ரவிச்சந்திர அஸ்வினை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
அஸ்வின் குறித்து கம்பீர் பேசுகையில், “உலகின் மிகச்சிறந்த வீரர் என்பதை அஸ்வின் மீண்டும் நிரூபித்து வருகிறார். ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவது அஸ்வினுக்கு தற்போது மிக சாதரண விசயமாக மாறிவிட்டது. பெரும்பாலான சுழற்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் சற்று தடுமாறுவார்கள், அவர்களால் பந்தின் தன்மை மாறிய பிறகு தான் துல்லியமாக வீசி முடியும். ஆனால் அஸ்வின் அப்படி இல்லை அவர் எந்த மாதிரியான பந்திலும், எந்த மாதிரியான சூழ்நிலையிலும் துல்லியமாக பந்துவீசும் திறமை பெற்றவர். இடது கை பேட்ஸ்மேன்கள் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அஸ்வின் மேலும் அபாயகரமான வீரராக திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்து அணியுடனான இரண்டு போட்டியிலும் ஐந்து விக்கெட்டுகளை அள்ளியுள்ள அஸ்வினை சமாளிப்பதே இங்கிலாந்து அணிக்கு பெரிய சிக்கலாக இருக்கும். இங்கிலாந்து அணி இந்த தொடரில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் அஸ்வினை சமாளிக்க முதலில் பழக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.