மூன்றாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆடுவது சந்தேகம்!!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா பங்கேற்றுள்ளது. தற்போது இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி20 போட்டியில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (8ம் தேதி) பிரிஸ்டலில் நடக்கிறது. 

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. 

இந்தியாவுடனான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 58 ரன் அடித்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். இதற்கிடையே ஸ்டோக்ஸ் ஃபிட்டாக இருப்பதால், ஹேல்ஸ் அல்லது ஜேக் பாலை விலக்கிவிட்டு அவரை அணியில் சேர்க்க இங்கிலாந்து வலியுறுத்தியது.

வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால் ஹேல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான ஜேக் பால், அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், “அடுத்த போட்டிக்கு ஸ்டோக்ஸ் அணிக்குள் வருவார். அவர் ஒரு அற்புதமான வீரர். ஆனால், ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்று. அணியின் நன்மைக்கான தேர்வை நாங்கள் செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

மூன்றாவது போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், டாம் குர்ரன், அலெக்ஸ் ஹாலெஸ், கிறிஸ் ஜோர்டான், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், டேவிட் வில்லி, டேவிட் மலான்.

Editor:

This website uses cookies.