விளையாடுவதற்கு வயது ஒரு தடையல்ல; சச்சின் டெண்டுல்கர் சொல்கிறார்
ஒரு அணிக்காக நாம் எப்படி பேட் செய்கிறோம், பந்துவீசுகிறோம் விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியமேத் தவிர, வீரருக்கு வயது ஒரு தடையில்லை என்று மாஸ்டர் பிளாஸ்டரும் முன்னாள் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
எஸ்பின்கிரிக்இன்போ சேனலுக்கு சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் இங்கிலாந்து அணியில் இளம் வீரர்கள் ஆலிவர் போப், சாம் கரன் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள், சர்வதேச பந்துவீச்சை இளம் வீரர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தாவது:
கிரிக்கெட்டைப் பொருத்தவரை ஒரு அணியில் இடம் பெற்ற வீரர் தனது அணிக்காக எப்படி விளையாடுகிறார் என்பதுதான் முக்கியம். அவர் எப்படி பேட் செய்கிறார், பந்துவீசுகிறார் என்பதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தனது நாட்டு அணிக்காகச் சிறப்பாக விளையாடுகிறார் எனும் பட்சத்தில் வயது ஒரு தடையில்லை.
நான் கிரிக்கெட்டில் களம்காணும்போது எனக்கு 16வயதுதான். கடந்த 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நான் 16வயதில் களமிறங்கியபோது, எனக்கு வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் யாரென்று தெரியாது, அவர்களின் பந்துவீச்சு வேகமும், தன்மையும் தெரியாது. ஆனால், அப்போது பாகிஸ்தானில் இருந்த பந்துவீச்சு சர்வதேச அளவில் சிறப்பானதாகும். ஆனால், எதிர்கொண்டு நான் விளையாடினேன்.
ஒரு இளம் வீரரை நாம் பாதுகாப்பாக களமிறக்குவதைக் காட்டிலும், இதுபோன்ற மிகப்பெரிய அணிகளுக்கு எதிராகக் களமிறக்கிவிடுவதுதான் சிறப்பு. நல்ல விஷயமும்கூட.
நாம் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறோம், இளம் வயது பயமில்லாமல் விளையாடுகிறார் என்று பேசுகிறோம். ஆனால், அதே வீரர் வளர்ந்து வரும் போது முதிர்ச்சி நிறைந்த வீரராக, அனுபவம் வாய்ந்தவராக எந்தச்சூழலையும் எதிர்கொள்ளும் திறமைபடைத்த சமநிலை கொண்டவீரராக வளர முடியும்.
ஆதலால், சாம் கரன், ஆலிவர் போப் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவாலை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். இந்த வயதில்தான் எதையும் கவனத்தில் கொள்ளாமல், சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொள்வார்கள். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.