இதுல என்னடா உங்களுக்கு பெருமை; நெட்டிசன்களுடன் சண்டை செய்யும் மைக்கெல் வாகன்
மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையே மழையால் கைவிடப்பட்டதால் இங்கிலாந்து வெளியேறி இந்திய மகளிர் அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீதர் நைட் இன்னொரு கூடுதல் நாள் ஒதுக்கப்படாததைக் கடுமையாக விமர்சித்து ஏமாற்றம் தெரிவிக்க, கிரிக்கெட் உலகின் முன்னாள் வீரர்களான மார்க் வாஹ், மைக்கேல் வான் உள்ளிட்டோர் கூடுதல் நாள் ஒதுக்கப்படாததைக் கண்டித்துள்ளனர்.
இங்கிலாந்து வெளியேற்றத்தைத் தாங்க முடியாத மைக்கேல் வான் தன் ட்விட்டர் பக்கத்தில், “உலகக்கோப்பை டி20 அரையிறுதிக்கு கூடுதல் நாள் இல்லையா? என்ன குப்பைத்தனமான முடிவு” என்று ட்வீட் செய்துள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் 2019 ஆடவர் உலகக்கோப்பையில் நியூசிலாந்தை எப்படி நீங்கள் வென்றீர்கள், அது போன்று இல்லையே இது, அதற்குண்டான ‘கர்ம வினை’தான் இது என்று நெட்டிசன்கள் மைக்கேல் வானை கலாய்க்க அவர் கடுப்பானார்.
இதற்கு நெட்டிசன்களை சாடும் விதமாக அவர் பதிலளிக்கையில், “இதனைக் கர்மா என்பவர்கள் அனைவரும் முட்டாள்கள்தான். 50 ஓவர் உ.கோப்பையில் இங்கிலாந்து வீரர்கள் களத்தில் திறமையை காட்டினார்களே. இங்கு திறமைகள் காட்டப்படாமல் வானிலையல்லவா ஆட்டத்தைக் கொண்டு சென்றது. கூடுதல் நாள் ஒதுக்காத முடிவு குப்பைத்தனமானதுதான்” என்று சாடியுள்ளார்.