அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்குகிறது.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா அயர்லாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. டப்ளினில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (97 ரன்), ஷிகர் தவான் (74 ரன்) ஜோடி அயர்லாந்தின் பந்து வீச்சை பின்னியெடுத்து அணி 200 ரன்களை கடக்க வித்திட்டனர்.

அதன் பிறகு களம் இறங்கிய சிறிய அணியான அயர்லாந்து இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சுழற்பந்து வீச்சு கூட்டணி குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை அள்ளினர்.இந்த நிலையில் இந்தியா- அயர்லாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதிலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘மிடில் வரிசையில் நாங்கள் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்கப்போகிறோம். அடுத்து வரும் இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளிலும் இது தொடரும்’ என்றார். முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படாத தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் இன்றைய ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது. கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி வீரர்களை பொறுத்தவரை முடிந்த வரை சவால் அளிக்க முயற்சிப்பார்கள்.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Editor:

This website uses cookies.