டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்களில் இது நடக்கும்! வெல்லிங்டன் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்!

வெலிங்டன் பேசின் ரிசர்வ் பிட்சில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் நாளை (வெள்ளிக்கிழமை, 21-2-20) மோதுகிறது. இதில் இந்த அணிதான் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாத வண்ணம் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது.

ட்ரா வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய அணிக்கு பெரிய ஆறுதல் ஷார்ட் பிட்ச், பவுன்சர் சோதனை இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஆட முடியாமல் போயுள்ளது, ஆனால் அவருக்குப் பதிலாக 6 அடி 8 அங்குல உயர கைல் ஜேமிசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது ரன் அப், ஃபாலோ த்ரூ ஆகியவற்றைப் பார்க்கும் போது இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளிண்டாஃபை நினைவுபடுத்துகிறது. ஷேன் பாண்ட் எப்படி இதே பிட்சில் 2002 தொடரில் இந்திய பேட்ஸ்மென்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டினாரோ அதே போன்று கைல் ஜேமிசன் எதிர்பார்க்கப்படுகிறார்.

ஆனால் 2002-ல் இந்தியாவின் சுவர் ராகுல் திராவிட் ஒருமாதிரியான பிட்சில் திராவிட் எடுத்த 76 ரன்கள் இரட்டைச் சதத்தையும் விட உயர்வான மதிப்பு வாய்ந்ததாகும். இந்தியா அந்த டெஸ்ட் போட்டியை தோற்றது வேறு கதை.

இந்நிலையில் நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான பேசின் ரிசர்வ் பிட்சில் நல்ல புற்கள் காணப்படுகின்றன. இரு அணிகளுமே முதல் 2 நாட்களில் தங்கள் முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2வது இன்னிங்ஸில் பிட்ச் கொஞ்சம் எளிதாகி மேட்ச் அப்போதுதான் சூடுபிடிக்கும். பிட்ச் கொஞ்சம் மெதுவாகிவிடும். அப்போதுதான் கேன் வில்லியம்சன், விராட் கோலிக்குச் சவால் காத்திருக்கிறது, உத்திகளை வகுக்க வேண்டும், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், பீல்டிங் நிலைகள், பவுலிங் மாற்றங்களில் தெளிவான திட்டமிடுதல் தேவைப்படும்.

மேலும் வலுவான காற்று வீசும் போது காற்றை எதிர்த்து வீசக்கூடிய பவுலர் என்றும் காற்றுடன் வீசும் பவுலர் யார் என்பதையும் தீர்மானித்து அந்தந்த முனையை அந்தந்த பவுலருக்குத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, எனவே எதுவும் சுலபமல்ல.

முதல் 2 நாட்களின் புற்கள் விளையாடி விளையாடி தன் தன்மையை இழந்த பிறகும் கூட புல்லுக்கு அடியில் இருக்கும் பிட்ச் வன்மையாக இருப்பதால் நிச்சயம் பவுன்ஸ் இருக்கும். ஸ்பின்னர்களுக்கு ட்ரிஃப்ட், பவுன்ஸ் இருக்கும். இந்த டெஸ்ட் போட்டி ஆடப்படும் கூகபரா பந்து 20 ஒவர்களுக்குப் பிறகு அவ்வளவாக ஸ்விங் ஆகாது, ஆனால் பிட்சின் கடினத்தன்மையினால் பந்தின் தையலை தரையில் அடித்துப் போட்டால் நல்ல பவுன்ஸ் கிடைக்கும்.

நிச்சயம் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்யும், அப்படி நியூஸிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தால் மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா ஆகியோர் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது அவசியம், அதில்லாமல் முதல் 1 மணி நேரத்தில் 2-3 விக்கெட்டுகள் போனால் பின்னால் வருபவர்களுக்கு சோதனைக்காலம்தான். அதுவும் ஒருமுனையில் ட்ரெண்ட் போல்ட்டின் ஸ்விங், இன்னொரு முனையில் சவுத்தியின் துல்லியம் மற்றும் ஸ்விங் இரண்டையும் சமாளிக்க கொஞ்சம் ஆக்ரோஷ ஆட்டமும் தேவைப்படும், இத்தகைய பிட்ச்களில் ஷார்ட் பிட்ச் பந்துகள் ஸ்கோரின் வாய்ப்புகளாகப் பார்க்கப்பட வேண்டும் என்று இயன் சாப்பல் எப்போதுமே கூறுவார், ஆனால் இங்கு பவுண்டரிகள் கொஞ்சம் பெரிது, இதனால் ஹூக், புல் ஷாட்கள் ஆடும்போது கவனத்துடன் தேர்வு செய்து ஆட வேண்டியிருக்கும்.

அதே போல் நியூஸிலாந்து முதலில் பேட் செய்தால், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மாவை சமாளிப்பது கடினமே. ஆனால் அவர்கள் மண் என்பதால் சமாளித்து ஆடிவிட்டால் பிறகு இந்திய அணிக்கு கடினமாகிவிடும். ராஸ் டெய்லர் தன் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் நிச்சயம் அவர் கவனமாக ஆடுவார், அவர் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருமுறை முச்சதம் எடுத்திருப்பார், ஆனால் 290 வரை வந்தார். அதே போல் கேன் வில்லியம்சனின் இன்னிங்ஸ் கட்டமைக்கும் திறமையை இந்திய அணியினர் கற்றுக் கொள்ள வேண்டும்.

Sathish Kumar:

This website uses cookies.