இந்தியா – தென்னாப்பிரிக்கா : இரண்டாவது டெஸ்ட் இன்று துவக்கம், மீண்டு வருமா இந்தியா?

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சுரியனில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. வெற்றிபெற வேண்டிய வாய்ப்பை எளிதில் இந்திய அணி இழந்தது. இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் இன்று நடக்கிறது.

வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக தவானுக்குப் பதில் கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் களமிறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பர் சஹா காயம் அடைந்துள்ளதாகவும் அவருக்குப் பதில் பார்த்திவ் படேல் இன்றைய போட்டியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. முதல் போட்டியில் கண்ட தோல்வி காரணமாக, இந்த மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது.

முதல் போட்டியில் கண்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் இந்திய அணி, சிறப்பாக விளையாடும் என்று தெரிகிறது.

இந்தப் போட்டி பற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, செஞ்சுரியன் பிட்ச் உயிரோட்டமாக இருக்கிறது. இது போன்ற பிட்சைதான் எதிர்பார்த்தோம். இது வேகப்பந்துவீச்சுக்கு சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறோம். இன்றைய போட்டியில் சுழல் பந்துவீச்சாளரை உட்கார வைத்துவிட்டு, அவருக்குப் பதில் வேறு ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. எதையும் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்வோம். ரஹானேவை சேர்க்காதது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். ரஹானே, தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பதும் அவர் சிறந்த வீரர் என்பது தெரியும். எங்கள் டீமில், வெளிநாடுகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் அவர்தான். அதனால் அவரை நாங்கள் அறிவோம்.

இருந்தாலும் இப்போது ஃபார்மில் யார் இருக்கிறார்களோ, அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டதால் பீதி அடைய வேண்டியதில்லை. வீரர்கள் தங்கள் திறமையை இந்தப் போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்’ என்றார்.

Editor:

This website uses cookies.