இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய தேர்வு செத்துள்ளது.
இந்திய அணியில் ஜஸ்ப்பிரிட் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகிறார்.
இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் , புஜாரா, விராட் கோலி (கேப்டன்), விருத்திமான் சஹா, ரோகித் சர்மா ,ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா
தென்ஆப்பிரிக்கா: டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டிவில்லியர்ஸ் , குயின்டான் டி காக், கேஷவ் மகராஜ், வெரோன் பிலாண்டர், ரபடா, மோர்னே மோர்கல், ஸ்டெயின்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
உள்நாட்டில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா, உண்மையான சோதனை களத்தை இனி தான் பார்க்கப்போகிறது. இதற்கு முன்பு 6 முறை தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் கால்பதித்து இருக்கும் இந்திய அணி ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியது கிடையாது.
ஆனால் இந்த முறை விராட் கோலியின் படை அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் கடினமான இந்த தொடருக்கு என்று இந்திய அணிக்கு எந்த வித சிறப்பு முகாமும் நடத்தப்படவில்லை. பயிற்சி ஆட்டம் கூட ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக கூடுதலாக பயிற்சி எடுத்துக்கொள்வதில கவனம் செலுத்திய இந்திய அணியினர் சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்ற ஆவல் எல்லோரிடமும் காணப்படுகிறது.
பொதுவாக தென்ஆப்பிரிக்காவில் உள்ள புல்தரை ஆடுகளங்களில் (பிட்ச்), பந்து அதிவேகத்தில் எகிறும். உயிரோட்டமான இத்தகைய ஆடுகளத்தில் பந்தின் நகரும் தன்மைக்கு (ஸ்விங்) ஏற்ப கணித்து செயல்பட வேண்டும். நெஞ்சு அளவுக்கு எழும்பி வரும் பந்துகளையோ அல்லது ஆப்-சைடுக்கு சற்று வெளியே பவுன்ஸ் ஆகும் பந்துகளையோ சரியாக எதிர்கொள்ள தவறினால் அது பேட்டின் விளிம்பில் பட்டு ‘ஸ்லிப்’ பகுதியில் நிற்கும் பீல்டர்களின் கைக்கு சென்று விடும். ஸ்டம்பை விட்டு விலகும் பந்துகளை தொடாமல் விடுவது நல்லது. இது போன்ற விஷயங்களில் வீரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.