தமிழக வீரருக்கு அணியில் மீண்டும் இடம்; முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்றே அறிவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்குகிறது.
இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்றே அறிவித்துள்ளது.
ஸ்பின்னர்களாக அஷ்வினும் ஜடேஜாவும் எடுக்கப்பட்டுள்ளனர். இருவருமே பேட்டிங் ஆடுவார்கள். இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னரான அஷ்வினுக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் கண்டிஷனில் பந்து பெரிதாக திரும்பாது என்பதால் ஜடேஜாவை மட்டும் எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த போட்டியில் அஷ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கும் என்பதால் 2 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்களுடன் தான் இந்திய அணி ஆடும். எனவே 7 பேட்ஸ்மேன்கள், 2 ஸ்பின்னர்கள் இருப்பதால் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பும்ரா இல்லாததால், இஷாந்த் சர்மாவும் ஷமியும் சேர்க்கப்பட்டுள்ளனர். உமேஷ் யாதவிற்கும் குல்தீப் யாதவிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.