ரிஷப் பண்ட்டிற்கு இடம் கிடையாது; கேப்டன் விராட் கோஹ்லி உறுதி
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விரக்திமான் சஹாவே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்குகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா முதன்முறையாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கவுள்ளார். ரோஹித்துடன் மயன்க் அகர்வால் தொடக்க வீரராக இறங்குகிறார். புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அடுத்தடுத்த வரிசைகளில் இறங்குவார்கள்.
விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனாக யார் அணியில் எடுக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனை பொறுத்தமட்டில், பேட்டிங்கை பொருட்படுத்தாமல் விக்கெட் கீப்பிங்கில் சிறந்தவரையே அணியில் எடுக்க வேண்டும். அந்தவகையில் விக்கெட் கீப்பிங்கில் சிறந்தவரான ரிதிமான் சஹா தான் சரியான தேர்வாக இருப்பார் என முன்னாள் விக்கெட் கீப்பர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
கேப்டன் கோலியும் முன்பே இதுகுறித்த சமிக்ஞையை கொடுத்திருந்தார். இந்நிலையில், முதல் போட்டியில் ரிதிமான் சஹா தான் ஆடுவார் என்பதை கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். நாளை போட்டி தொடங்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் கோலி, ரிதிமான் சஹா தான் ஆடுவார் என்று தெரிவித்தார்.
கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய சஹா, காயமடைந்ததால் அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் அணியில் ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார் சஹா.