அவங்க படுற கஷ்டம் எனக்கு புரியுது; தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கு ஆதரவாக பேசிய அஸ்வின்
புனே டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் மஹராஜ் 72 ரன்களையும் பிலாண்டர் 44 ரன்களையும் சேர்த்து இருவரும் சேர்ந்து 109 ரன்களை 9வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது குறித்து அஸ்வின் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இது ஒரு நல்ல பிட்ச், பிலாண்டர் மிக அருமையாக பேட் செய்தார். வேகப்பந்து வீச்சுக்கும் ஸ்பின் பவுலிங்குக்கு எதிராகவும் அவரது உத்தி ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருந்தது. அவர் கைகளை தளர்வாக வைத்து ஆடினார். பேட்டும் பந்தை நோக்கி அருமையாக வருகிறது.
எப்போதும் இந்த டெய்ல் எண்டர்கள் என்ற ஒரு மாயை பெரிதாக்கப்பட்டு வருகிறது, ஒருவர் நன்றாக பேட் செய்கிறார் என்றால் அது நன்றாகப் பேட் செய்வதுதானே தவிர டெய்ல் எண்டர் ஆடுகிறார் என்பதல்ல.
இப்போதெல்லாம் யாரும் பேட் செய்யத் தெரியாமலெல்லாம் இல்லை. நம் அணியில் கூட நம்பர் 11 வரைக்கும் பேட் செய்கிறோம்.
மகராஜ், பிலாண்டர் சதக்கூட்டணி எனக்கு வெறுப்பையோ சோர்வையோ ஊட்டவில்லை, மாறாக வீசுவதற்கான உத்வேகத்தைத்தான் அளித்தது.
தென் ஆப்பிரிக்கா நன்றாக பேட் செய்வதாகவே நான் உணர்கிறேன், கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள். சில வேளைகளில் 150-160 ஓவர்கள் களத்தில் பந்து வீசி பீல்ட் செய்துவிட்டு பேட்டிங்கில் உடனே இறங்க வேண்டும் என்ற நிலைக் கடினமானது. களைப்படைந்த அவர்களது கால்களுக்காக நான் பரிதாப்படுகிறேன்.
இது ஒரு இந்தியத் தன்மை பிட்ச்தான், என் அனுபவத்தில் கூறுகிறேன். இது ஏன் இந்தியத் தன்மை பிட்ச் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. இத்தகைய பிட்ச்கள்தான் முதல் தர கிரிக்கெட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன.” என்றார் அஸ்வின்.
ஆகவே அஸ்வினே கூறிவிட்டார் இது உள்நாட்டு முதல்தரப் போட்டிகளுக்கான பிட்ச் என்று.