தல தோனி எங்க கூட தான் இருக்காரு; பத்திரிக்கையாளரை பங்கமாக கலாய்த்த விராட் கோஹ்லி
தென் ஆப்பிரிக்க அணிக்கு முதன் முதலாக 3-0 ஒயிட் வாஷ் அளித்த இந்திய அணியின் போட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டங்களில் இந்திய அணியுடன் இணைந்தார் மகேந்திர சிங் தோனி.
இது தொடர்பாக பிசிசிஐ தன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள படத்தில் தோனி அறிமுக இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஷாபாஸ் நதீம் ஒரு மரபான இடது கை ஸ்பின்னர் இந்த டெஸ்ட் போட்டியில் கடைசி 2 விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு அருமையான ஒரு ரன் அவுட்டையும் செய்தார்.
பிற்பாடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தோனியைச் சந்தித்தது பற்றி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் “பிரமாதமான தொடர் வெற்றிக்குப் பிறகு உண்மையான இந்திய லெஜண்டைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி” என்ற வாசகத்துடன் தோனியுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஆட்டம் முடிந்த பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, விராட் கோலி, ஜாலியாக, “தோனி இங்குதன இருக்கிறார், ஓய்வறையில் இருக்கிறார், வந்து ஒரு ஹலோ சொல்லுங்கள்” என்றார்.