நாங்களே ரொம்ப கஷ்டத்துல இருக்கோம்… எங்கள விட்றுங்க ப்ளீஸ்; புலம்பும் இலங்கை பயிற்சியாளர் !!

ஒட்டுமொத்த இலங்கை கிரிக்கெட் அணியுமே விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக இலங்கை அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர் வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலுமே இலங்கை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருப்பதால், அந்நாட்டு ரசிகர்களே இலங்கை அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முத்தையா முரளிதரன் போன்ற முன்னாள் இலங்கை வீரர்களே இலங்கை அணியை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொடர் தோல்விகளாலும், கடும் விமர்ச்சனங்களினாலும் இலங்கை அணிக்குள்ளும் தற்போது பிரச்சனைகள் உருவாகியுள்ளது, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் இறுதியில் இலங்கை பயிற்சியாளரும், கேப்டனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டனர்.

இந்தநிலையில், இலங்கை பயிற்சியாளரான மிக்கி ஆர்த்தர், ஒட்டுமொத்த இலங்கை அணியும் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிக்கி ஆர்த்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “நாங்கள் வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகவே சந்திக்கிறோம். இப்போது நிறைய கற்றும் வருகிறோம். நானும் ஷனகாவும் இந்த அணியை வளர்க்க பாடுபடுகிறோம். நாங்கள் இருவருமே இப்போது விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டோம். நாங்கள் நினைத்ததை முடிக்க முடியவில்லை. நீங்கள் பார்த்தது ஆரோக்கியமான உரையாடல்தான். அதில் தவறேதும் இல்லை, அதை தவறாகவும் சித்தரிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார் மிக்கி ஆர்த்தர்.

முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் அர்ணால்டு, இலங்கை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையேயான வாக்குவாதத்தை விமர்சித்து ட்வீட் போட்டிருந்தார், இதற்கு பதில் கொடுக்கும் வகையில் தான் மிக்கி ஆர்த்தர் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

Mohamed:

This website uses cookies.