இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்வதற்காக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பணேசர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியா திரும்பியிருக்கும் வீரர்கள் அடுத்த சில வாரங்களிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். இதற்காக ஏற்கனவே இங்கிலாந்து வீரர்கள் இந்தியா வந்தடைந்து தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி துவங்கும் இந்த தொடரை விராட் கோலி முழுமையாக தலைமை தாங்குகிறார்.
இதற்கு முன்னர் இவ்விரு அணிகளும் சென்னை மைதானத்தில் ஒன்பது முறை மோதியுள்ளனர். இதில் 5 முறை இந்திய அணியும் மூன்று முறை இங்கிலாந்து அணியும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. கடைசியாக 2016ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012/13 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த மாண்டி பனேசர் அபாரமாக விளையாடி மூன்று போட்டிகளில் கிட்டத்தட்ட 17 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்நிலையில் வருகிற தொடர் குறித்து அவர் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். “இந்திய அணி இக்கட்டான சூழலை சந்தித்தபோதும் அதிலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை அபாரமாக வென்றிருக்கிறது. குறிப்பாக எந்த வித அனுபவமும் இல்லாத வீரர்களை வைத்து இத்தகைய செயலை செய்திருப்பது இயல்பான ஒன்றல்ல. இங்கிலாந்து அணிக்கும் நிச்சயம் அச்சுறுத்தலாக அவர்கள் இருப்பார்கள். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரையும் இந்திய அணி சமாளித்துவிட்டால் தொடரை வென்று விடுவார்கள்.” என தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.